- +91 93842 64229
- holyfamilychurch.cn@gmail.com
'இறைமகன் இயேசு விண்ணேற் படைந்த இருபது வருடங்கள் நிறைவடையும் முன்பே, அதுவும், ஐரோப்பிய நாடுகளில் காலூன்றுவதற்கு முன்பே, கத்தோலிக்கக் கிறிஸ்தவம் குமரிமண்ணில், இயேசுவின் நேரடி சீடர் தோமையார் வழியாக, கால் பதித்து விட்டது'.
இப்படி சரித்திர ஆய்வாளர்கள் கூறும் சத்தியத்தை இன்றளவும் பறை சாற்றி நிற்கிறது, திருவிதாங்கூரில் கி.பி. 52-ல் தோமையார் கட்டிய “அரப்பள்ளி'. புனித தோமையாருக்கு ஆதரவளித்த சேர நாட்டு அண்டை நாடாக குமரி மண்ணில் இருந்த “ஆய்” தேசத்து ஆட்சியாளர்களின் வம்சா வழியைச் சேர்ந்தவர்களும், அப்போதே கிறிஸ்தவத்தைத் தழுவிய “தோமையார் கிறிஸ்தவர்களின்” வழித்தோன்றல்களும்,, இன்றளவும் கேரள தேசத்து நிலப் பரப்பில் ஏராளமாகவும், குமரி மண்ணில் சொற்பமாகவும் உள்ளனர் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கூற்று. [எம். இம்மானுவேல், 2002, பக்கம், 152] இவ்வளவு தொன்மையான பாரம்பரியம் கொண்ட சில கிறிஸ்தவ குடும்பங்கள் பண்டைக் காலத்திலேயே புகழ்பெற்ற நகரமான கோட்டாறு பட்டணத்தின் மேற்குத் திசையில் அமைந்திருந்த அடர்ந்த காட்டுப் பகுதியான “மேலக்காடு” பகுதியில், புனித சவேரியார் குமரி மாவட்டத்துக்கு வந்து, கிறிஸ்தவத்தை பரப்புவதற்கு முன்பே, வாழ்ந்து வந்ததாகவும், கோட்டாறு பகுதி வணிகர்களிலும் பல கிறிஸ்தவர்கள் இருந்ததாகவும், வரலாற்று ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள். [டாக்டர். வி. லாறன்ஸ், 2002. பக்கம்- 46].
இராமன்புதூர் பகுதியில் அமைந்துள்ள, மீன் சந்தையை ஒட்டி இருக்கும் சுமித்தேரியில் 1519-ம் வருடம் வாழ்ந்த கோட்டாறு மலயன் திருப்பாப்பு நாடார் என்பவரின் கல்லறையோடு, அவர் பெயர் தாங்கிய ஒரு குருசடி பள்ளி [சுமித்தரி சிற்றாலயம்] இருந்தது என்பதும், அதே பெயரில், 1062-ல் [ஆங்கில வருடம் 1887] பட்டா எண்.1221 ஒரு டிரஸ்ட் திருவனந்தபுரம் மத்திய வருவாய் அலுவலகத்தில் பதியப்பட்டுள்ளது என்பதையும், 1940- களில் கூட, நாகர்கோவில் தாலுகா அலுவலகத்தில் அது புதுப்பிக்கப் பட்டுள்ளது என்றும், வரலாற்று ஆய்வாளர் இம்மானுவேல் தன் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். [எம்.இம்மானுவேல், 2002, பக்கம் 153] இன்று வரை கார்மல் நகர் பங்கு பொதுக் கல்லறைத் தோட்டமாக இது பயன்பாட்டில் இருந்து வருகிறது.
பழமையான இது போன்ற பல சுமித்தேரி குருசடிகள் இராமன்புதூர் பகுதியில் காணப்படுவது புனித தேவசகாயத்தின் காலத்திற்கு முன்பே இராமன்புதூரில் வாழ்ந்த கிறிஸ்தவர்களின் சமூக இருப்புக்கு ஆணித் தரமான சான்று. அடர்ந்த பஞ்சவங்காட்டில், மேலக்காடு என்ற அறியப்பட்ட மேலராமன்புதூர் பகுதியில் ஒரு இடத்தில் தான், இல்லறப் புனிதர் என்று போற்றப்படும், நமது குமரி மண்ணின் மைந்தர், மறைசாட்சி புனித தேவசகாயம் 1751-ல் சில மாதங்கள் சிறை வைக்கப் பட்டிருந்தார் என்பதும், அந்நேரத்தில் அவருக்குப் பெருவிளையில் காட்சியளித்தது போலவே திருக்குடும்பம் இரண்டாவது முறை காட்சியளித்தது என்பதும் அதிகாரப்பூர்வமான வரலாறு. அன்றைய திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் தளவாய் ராமையன் திட்டமிட்டது போல, புனித தேவசகாயத்தின் மரண தண்டனையை, நடுக்காட்டு எசக்கியம்மன் கோயில் அருகில் இருந்த கழுவன்திட்டையில் ரகசியமாக அரங்கேற்ற, இராமன்புதூர் பகுதியில் அப்போது வாழ்ந்த கிறிஸ்தவர்கள் சிலர் தடையாக இருந்ததன் விளைவாகவே, தேவசகாயம் தோவாளைக்கு மாற்றப் பட்டு, 1752 ஐனுவரி 14-ல் ஆரல்வாய்மொழி காற்றாடி மலையில் ரகசியமாக கொல்லப்பட்டார் என்பத ஒரளவே அறிந்த வரலாறு. இருந்தாலும், இராமன்புதூர் பகுதியில் மட்டுமல்ல குமரி மாவட்ட உள்நாட்டு மக்களிடையே கத்தோலிக்கக் கிறிஸ்தவம் பரவலாகவும் ஆழமாகவும் வேரூன்றியதற்கும், ஆன்மீகத் தேவைகளுக்காக நேமத்துக்கும், வடக்கன் குளத்துக்கும் சென்று வந்த, இப்பகுதி மக்கள் திருக்குடும்பத்தை தங்கள் பாதுகாவலாகப் போற்றுவதற்கும் புனித தேவசகாயத்தின் வாழ்வு நிகழ்வுகளும் ஒரு உறுதியான காரணம் என்பதை ஒருபோதும் மறுக்க முடியாது.
1700-களில் இராமன்புதூர், புன்னக்காட்டு விளை, தளவாய்புரம் வடக்கு கோணம், மறவன் குடியிருப்பு பகுதிகளில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள், மங்கம்மாள் சாலையோரம் மீனவ பெண்களால் நாட்டப்பட்டிருந்த ஒரு கல்குருசை வழிபடச் சென்று வந்ததால், அந்த இடம் குருசடி என்று அறியப்பட்டது.
பிற்காலத்தில் அதே இடத்தில் சிறு ஆலயம் கட்டப்பட்டபோதும் அன்றைய குருசடி ஆலய இறைமக்களாக இவர்களே இருந்திருக்கிறார்கள். குறிப்பாக, 1842-ல் குருசடி ஊரில் இருந்த அந்தோனியார் ஆலயத்தைச் சுற்றிலும் கிறிஸ்தவர்களே இல்லை, அங்கிருந்த ஆலயத்தின் இறைமக்களாக, ஆலயத்தின் வடக்குப் பகுதியான ராமன்புதூர், புன்னை நகர், கோணம், தளவாய்புரம் ஊர்களில் வாழ்ந்த கிறிஸ்தவர்களும், தெற்குப் பகுதியான மறவன் குடியபிருப்பைச் சுற்றி வாழ்ந்த கிறிஸ்தவர்களும் தான் இருந்துள்ளனர் என்பதற்கு சான்றுகள் உள்ளன. [பி.லீனஸ் ராஜ், 2021. பக்கம் 18] 1865-ல் இராமன்புதூரில் தொடங்கப்பட்ட ஆர்.சி. தொடக்கப் பள்ளி இன்றளவும் “ஆஅர்.சி. தொடக்கப்பள்ளி, இராமன்புதூர் [இருப்பு] புன்னை நகர்” என்ற முகவரியில் புன்னைநகரில் செயல் படுகிறது. 1086-ம் வருஷம் [ஆங்கில வருடம் 1910] பங்குனி மாதம் 8-ந் தேதி பொதுக் கிணறு” தொடர்பாக பதிவு செய்யப் பட்ட நிர். 1558 பத்திரம் அப்போது ராமன்புதூரில் வாழ்ந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை ஆதாரப் பூர்வமாக குறிப்பிடும் ஒரு ஆவணம். அதில் 52 குடும்ப அங்கங்களின் கையொப்பம் காணப்படுகிறது. இன்று நாம் காணும் பஞ்சவங்காடு குருசடி அந்தோனியார் ஆலயம் 1911- ல் கட்டி முடித்ததில் இந்த வடபகுதி மற்றும் தென் பகுதி ஐந்து பெரும் நிதி கொடுத்து பங்காற்றியிருக்கிறார்கள்.
1922-ல் இராமன்புதூரில் ஆண்களுக்காக கார்மல் பள்ளி தொடங்கப்பட்டு, 1932-ல் உயர்நிலைப் பள்ளியானது. 1927-ல் மாதவடியாள் என்ற ஒரு மேல ராமன்புதூர் பெண்மணி குருசடி அந்தோனியார் ஆலயத்துக்கு தானமாகக் கொடுத்த 48 சென்ட் நிலத்தில் “சிறுமலர் பள்ளி” தொடக்கப் பள்ளியாக 3-ம் வகுப்பு வரை தொடங்கப்பட்டு 5-ம் வகுப்பு வரை உயர்த்தப் பட்டு, 1942-ல் அருட்சகோதரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 1955- ல் சிறுமலர் பெண்கள் நடுநிலைப்பள்ளி அருட்சகோதரிகளால் தொடங்கப்பட்டது. இந்தப் பள்ளிகளால் இரமன்புதூர் சுற்றுவட்டார கிறிஸ்தவர்களின் கல்வித் தரம் வேகமாக வளர்ந்தது.
குருசடி ஆலய நிர்வாகத்தை முடுதம், கணக்காபிள்ளை போன்ற பொறுப்புகள் ஏற்று பணியாற்றியவர்களில் இராமன்புதூரைச் சேர்ந்தவர்களின் பங்களிப்பும் முக்கியமானது. குறிப்பாக, கீழ ராமன்புதூர் வி.தொம்மையப்பன் முடுதமாக இருந்துள்ளார். 1925-ல் ஆலய கணக்குகள் எழுத கணக்கன் என்ற பொறுப்பில் ஒருவரை நியமிக்க குருசடி சபையோரின் முடிவின்படி, கொல்லம் மறை மாவட்ட ஆயருக்கு கொடுக்கப் பட்ட மனுவில், இராமன்புதூரைச் சேர்ந்த யேசு அடிமை கிறாஸ், [கிறாஸ் மேஸ்திரி], சந்தியாவு ஞானக்கண் ,டி.எஸ்.தொம்மையப்பன் நாடார், போன்றோர் உட்பட பக்கத்து ஊர் பிரமுகர்களும் கையெழுத்திட்டுள்ளனர். இதன் விளைவாக, நியமிக்கப் பட்டு இராமன்புதூர் கோல்டன் தெருவைச் சேர்ந்த டி.எஸ். உத்தரிய முத்து அவர்கள் 1925 முதல் 1962 வரை கணக்கர் பொறுப்பில் இருந்துள்ளார்.
1930-ல் கொல்லம் மறைமாவட்டம் பிரிக்கப் பட்டு கோட்டாறு மறைமாவட்டம் உதயமானது. 1940-ல் குருசடி தனிப் பங்காக உயர்த்தப் பட்டது. அப்போது குருசடி அந்தோனியார் ஆலயத்தின் தென் பகுதி ஊர்களில் செபக் கூடங்கள் வரத் தொடங்கியிருந்தன. இதனால் வட பகுதி ராமன்புதூர் வட்டார ஊர்களில் வாழ்ந்த மக்களும் தங்கள் பகுதியில் ஜெபக் கூடம் அமைக்க முயற்சிகள் மேற்கொண்டனர். இந்த முன்னெடுப்பின் பயனாக 1944-ல் தற்போது கார்மல்நகர் ஆலயம் அமைந்துள்ள நிலத்தின் மையப் பகுதியை சமன்படுத்தி அன்றைய கோட்டாறு ஆயர், மேதகு. ஆஞ்சிசாமி ஆண்டகையின் அனுமதியோடு 6 கல் தூண்களில் நிற்கும் கூரை, மேற்குப் புறம் சுவர், அதில் திருக்குடும்ப படம், சுற்றிலும் கைப்பிடி சுவர்கள் அமைத்து 22 அடி நீளம் 16 அடி அகலம் கொண்ட ஒரு ஜெபக் கூடம் எழுப்பிய ஊர்மக்கள் அதில் தினமும் மாலை வேளையில் ஜெபமாலையும் பிரார்த்தனையும் செய்யத் தொடங்கினர்.
இதற்கிடையே ஆலயம் கட்டுவது தொடர்பாக சிறுமலர் தொடக்கப் பள்ளியில் வைத்து கீழராமன்புதூர், ராமன்புதூர், மேலராமன்புதூர் பகுதி இறைமக்களின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ஆலயத்தின் பாதுகாவல் திருக்குடும்பம் என்பதில் அனைவரும் ஒருமித்த கருத்து கொண்டிருந்தார்கள். ஆனால் ஊரின் எந்தப் பகுதியில் ஆலயம் கட்டுவது என்பதில் கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கூட்டம் பாதியில் கலைந்தது. இந்நிலையில், ஜெபக்கூடம் இருந்த சர்வே 2313-ன் 50 சென்ட் நிலந்தை அதன் உரிமையாளர் அந்தோனி திருப்பாப்பு நாடார் என்பவர் அன்றைய குருசடி பங்குத் தந்தை அருட்பணி. ரிச்சர்ட் ரொசாரியோ பெயருக்கு, 1120 வைகாசி 8, 11.8.1120 [ஆங்கில வருடம், 1944] அன்று இஷ்டதானமாக எழுதிக் கொடுத்தார். அவர் எழுதிக் கொடுத்த பத்திரத்தில், “நாகர்கோவில் பகுதி, ராமன்புதூர், மேல ராமன்புதூர், கீழ ராமன்புதூர், தளவாய்புரம், காட்டுவிளை, புன்னக் காட்டுவிளை முதலாய ரோமன் கத்தோலிக்க ஊர் வகைக்கு வேண்டி” என்ற வாசகங்கள் உள்ளன.
ஆனால் மேல ராமன்புதூர் பகுதி இறைமக்கள் ஜெபக்கூடம் இருந்த இடத்தில் ஆலயம் கட்டும் முயற்சியிலிருந்து பின்வாங்கி, தனியாக ஆலயம் கட்ட எத்தனித்ததால் ஆலயப் பணி தடைபட்டது. இருந்தாலும் திட்டமிட்டபடியே ஆலயப் பணியைத் தொடங்கும் முன்னெடுப்பில், அன்றைய திருவிதாங்கூர் அரசின் அனுமதிக்காக, முறைப்படி பங்குத்தந்தை ரிச்சர்ட் ரொசாரி பெயரில் இராமன்புதூர் ஊர் பெரியவர்களால் 1944ல் அரசுக்கு மனு அளிக்கப்பட்டது . ஆனால் அந்த மனு நிராகரிக்கப்பட்டது. எனவே, ஆலயப் பணி தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. ஜெபக்கூடத்தில் அன்றாட மாலை நேர ஜெப மாலையும், பிரார்த்தனைகளும் தொடர்ந்தன.
1947-ல் அருட்பணி அம்புரோஸ் பெர்னாண்டோ அடிகள் குருசடி பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற பிறகு, அரசு நிராகரித்த மனுவுக்கு மேல் முறையீடு செய்து, ஆலயத்துக்கான அனுமதி வாங்கும் முயற்சி தீவிரமடைந்தது. இம்முயற்சியில் ஊர் தலைவர் சூசை வாத்தியார், மற்றும் டி.எஸ்.தொம்மையப்பன் போன்ற பிரமுகர்களோடு, அன்றைய பட்டதாரி இளஞர்களான திரு.டி.தாமஸ், திரு. இ.எஸ். பிரான்சிஸ், திரு.ஜி.வியாகப்பன் ஆகியோர் இணைந்து திருவனந்தபுரம் தலைமைச் செயலகதிற்குச் சென்று அரசு அதிகாரிகளையும், அமைச்சர்களையும் பலமுறை நேரில் சந்தித்தனர். இதன் பயனாக, அன்றைய திருவிதாங்கூர்- கொச்சி இடைக்கால அரசின் வருவாய்த்துறை அமைச்சர் இக்கண்ட வாரியார் ஜெபக்கூடம் இருந்த இடத்துக்கு நேரடியாக வந்து “ஆய்வு மேற்கொண்டு, “இது பிரதான இடம் தான் என்று அறிவித்தார். அவரது அறிவிப்பு அரசு ஆணையாக 22.12.1948-ம் தியதி, “கல்லறை இல்லாத கோவில் கட்டுவதற்கான அனுமதி” [permission granted to erect a church without cemetery] G.O. No P1-1225/49/CS dated 22.12.1948] என்ற வாசகங்களோடு வழங்கப்பட்டது.
அந்த அனுமதியின் அடிப்படையில் ஜெபக்கூடத்திலேயே முதல் திருப்பலி உடனடியாக நிறைவேற்றத் தடைகள் எதுவும் இல்லாதபோதும், பலிபீடத்தோடு ஒரு சிற்றாலயம் கட்டி முடித்து அதில் திருப்பலி நடத்தலாம் என்று பங்குத்தந்தை அருட்பணி. அம்புரோஸ் பர்னாண்டோ சொன்ன யோசனைப்படி ஆலய கட்டுமானப் பணிகள் உடனடியாக தொடங்கப் பட்டது. நிதி ஆதாரத்துக்காக, அன்று பங்கில் இணைந்திருந்த சுமார் 152 குடும்பங்களிடம் ரூ.10/- வீதம் கட்டிட வரியும், நன்கொடைகளும் வசூலிக்கப்பட்டது. ஆலயப் பணிக்கு நிதி திரட்டுவதில் இராமன்புதூர் இளைஞர்கள், பெரியோர்கள், பெண்கள் என் அனைத்து தரப்பினரும் இணைந்து உழைத்தனர். குறிப்பாக “திருக்குடும்ப பஜனை சேவா சங்கம்” என்ற அமைப்பின் இளைஞர்கள் திரு. ராஜேந்திரன்,, புஷ்பதாசன், தாசன் டெய்லர், எம்.ஜோசப்ராஜ், திரு.ஐ. தாசன் ஆகியோர் திரு.சி.ஜேசுவரம் சிரியர், மற்றும் திரு இ.எஸ். பிரான்சிஸ் கியோர் எழுதிய பஜனை பாடல்களைப் பாடி நிதி வசூலித்து அளித்துள்ளனர். இதில் கீழ ராமன்புதூர் எஸ்.மரிய கபிரியேல், திரு. ஃபெதலிஸ், ஆகியோரின் பங்களிப்பும் இருந்துள்ளது. அதுபோலவே, “திருக்குடும்ப ஆலய கடன் நிவாரணக் கமிட்டி” என்ற பெயரில் திரு. ஜி. உத்தரிய முத்து அவர்கள் தலைவராகவும், திரு. ஜி, ஜோசப் ஆசிரியர் செயலராகவும் இருந்த இளைஞர் அமைப்பும் நிதி திரட்டி அளித்துள்ளனர். இப்படி இரவு பகலாக ஊரின் அனைத்து மக்களும் அயராது உழைத்ததன் பயனாக ஒரு வருடத்துக்கு உள்ளாகவே, ஏற்கனவே இருந்த ஜெபக்கூடத்தை முன் மண்டபமாக்கி, 20 அடிக்கு 18 அடியும், 40 அடிக்கு 28 அடியும் நீள அகலம் உள்ள ஆலயக் கட்டிடப் பணிகள் நிறைவுற்று, 60 அடி நீளத்தில் அழகிய பீடத்தோடு கட்டி முடிக்கப் பட்ட இராமன்புதூர் திருக்குடும்ப சிற்றாலயம், 1949ம் ஆண்டு நவம்பர் 26ம் நாள் வெள்ளிக் கிழமை அன்றைய பங்குத் தந்தை அருட்பணி, அம்புரோஸ் பர்னாண்டோ அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, அதில் முதல் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது. முதல் பாதுகாவல் திருவிழா 1950 ஜனுவரி மாதம் மூன்றாம் வாரம் நடந்தது. இருபது வருடங்களுக்குப் பின்னர், 1970-ல் இராமன்புதூர் தனிப் பங்கு அந்தஸ்து பெற்ற பிறகு தான் பாதுகாவல் திருவிழா டிசம்பர் மாத இறுதியில் நடத்தும் நடைமுறை தொடங்கியது.
1951-ல் தொடங்கிய பங்குத் தந்தை இல்லக் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 1952 ஜனுவரி 25-ம் தியதி குருசடி பங்குத் தந்தை அருட்பணி. டி.சி.ஆன்றனி அவர்களால் திறக்கப் பட்டது. அதன் பிறகு தான் பாதுகாவல் திருவிழா நடக்கும் பத்து நாட்களும் பங்குத் தந்தை நமது ஆலய பங்கு இல்லத்தில் தங்கியிருக்கத் தொடங்கினார். தங்கியிருக்க வருகை தரும் பங்குத் தந்தைக்கு திருவிழா கொடி ஏற்ற தினத்தன்று ஊர்மக்கள், உணவுப் பொருட்களோடு, திரளாகச் சென்று சந்தித்து, அவருக்கு வரவேற்பளித்து, அழைத்துவரும் வழக்கம் அப்போது தான் தொடங்கியது. அதுபோலவே, லிட்டில் பிளவர் அருள் சகோதரிகளையும் அழைப்பது வழக்கம். இந்த சம்பிரதாய அழைப்பும் வரவேற்பும் திருவிழா “கொடியேற்ற் தினத்தன்று இன்றளவும் தொடர்ந்து நம் ஊர் நிர்வாகத்தால் கடைபிடிக்கப் படுவது கவனத்துக்கு உரியது. 1955 செப். 7-ந் தேதி கோட்டாறு ஆயர் மேதகு. டி ஆர். அஞ்சிசாமி பிறப்பித்த உத்தரவுப்படி, இராமன்புதூர், புன்னை நகர், மேலராமன்புதூர், தளவாய்புரம் ஊர்கள், குருசடி பங்கிலிருந்து நிதிவாரியாகப் பிரிக்கப்பட்டது. அதாவது, மேற்படி ஊர் மக்கள், குருசடிக்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்தும், தனித்தனி நிதி நிர்வாக அமைப்புகளாக செயல்பட அனுமதி அளித்தும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அது. அந்த உத்தரவின் படி இராமன்புதூர் தொடக்கப் பள்ளியின் [லிட்டில் பிளவர்] பராமரிப்புப் பணிகளை இராமன்புதூர் வரி வாயிலிருந்தும், பெண்கள் நடுநிலைப் பள்ளியின் [லிட்டில் பிளவர் பெண்கள் பள்ளி] பராமரிப்பினை இராமன்புதூர், தளவாய்புரம், புன்னைநகர் ஆகிய மூன்று ஊர்களின் வரிவசூல் வருவாயிலிருந்தும் செய்ய வேண்டும் என்று ஆயர் அறிவுறுத்தியிருக்கிறார். இது நடைமுறைக்கு வராத நிலையில், ஒரு வருடத்துக்குப் பிறகு அருள் சகோதரிகளின் சபைக்கு இந்த பள்ளிகள் ஆயரால் முழுமையாகக் கொடுக்கப்பட்டது. சொத்துகளும் எழுதிக் கொடுக்கப்பட்டன. அதன் பிறகு, லிட்டில் பிளவர் பள்ளிகள் அருள் சகோதரிகளால் விரிவாக்கப்பட்டுள்ளது. அதுநாள் வரை குருசடி ஆலயத்தில் நடந்து வந்த “மறைக்கல்வி வகுப்புகள் 1955- ல் தான் ஆண்களுக்கு கார்மல் பள்ளியிலும், பெண்களுக்கு லிட்டில் பிளவர் பள்ளியிலும் நடை பெறத் தொடங்கியது. ஆலய வளாகத்தில் நாம் காணும் புனித அந்தோனியார் குருசடி, 1958-ல் கட்டி முடிக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.
1962- லிருந்து 1968 வரை கார்மல் சவபயைச் சேர்ந்த அருட்பணி. டோமினிக் அவர்கள், சில கார்மல் சபை குருமாணவர்களோடு நம் ஆலயத்தில் தங்கியிருந்து தினமும் திருப்பலி நிறைவேற்றி ஆன்மீகப் பணி செய்து வந்தார். ஆலய வளாகத்தில் தங்கியிருந்த இவரது அர்ப்பணமிக்க பணிக்காலத்தில் பல பக்தசபைகள் தொடங்கப்பட்டன. ஆலயத்தில் தினசரி திருப்பலி நடந்த காரணத்தால் பகதர்களின் வருகை அதிகரித்த போது ஆலயத்தில் இடநெருக்கடி ஏற்பட்டு, ஆலயத்தை விஸ்தரிக்க வேண்டிய தேவையும் உணரப்பட்டது. இதனால், 28.8.1966-ல் நடந்த பொதுக்குழுவில் புதிய ஆலயம் கட்ட தீர்மானம் நிறைவேறியது. பங்கு உறுப்பினர் குடும்பங்களுக்கு தலா ரூ.100/ கட்டிடவரி நிர்ணயிக்கப்பட்டு, கட்டுமானத்துக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கி, ஆயர். மேதகு. டி. ஆர். ஆஞ்சிசாமி சே.ச, அவர்களால் பூ அடிக்கல் நாட்டப் பட்டது. அன்றைய குருசடி பங்குத் தந்தையும், வேலூர் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டவருமான அருட்பணி. ஆர். அந்தோனிமுத்து அடிகள் மற்றும் ஊர் தலைவர். சூசை வாத்தியார் ஆகியோர் உடனிருந்தனர். 1968-ல் ஆலயக் கட்டிட வரி வசூலிக்கத் தயாராக்கிய உறுப்பினர் பெயரேட்டில் 362 குடும்பத் தலைவர்களின் பெயர்கள் உள்ளன.
ஆலய பீடத்தில் இருந்த திருக்குடும்ப சுரூபம், இதர சில சுரூபங்கள் ஆகியவற்றை வடிவமைத்து வாக்கிய திரு. ஜார்ஜ் [சோர்ஸ்] மேஸ்திரியுடைய வித்தியாசமான வடிவமைப்பு வரைபடத்தோடு ஆலயப் பணிகள் தொடங்கி நடந்து வந்தன. இதற்கிடையே 1970 ஜூன் 23-ல் இராமன்புதூர் பங்கு தனிப் பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. ஐ. கார்மல் அடிகள் பொறுப்பேற்றார். அவரது வருகைக்குப்பின் ஆலய கட்டிடப் பணிகள் துரிதமடைந்தன. பங்குத்தளத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன். இராமன்புதூர் “கார்மல் நகர்” பங்கு என்ற பெயர் மாற்றம், இளைஞர் இயக்கம், பக்த சபை அளவில் தொடங்கி நாளடைவில் அதிகாரப் பூர்வமாக மறைமாவட்ட அளவில் நடைமுறைக்கு வந்தது. கட்டிடப் பணிகளை மேற்பார்வையிட பங்குத் தந்தை தலைமையில் திரு. டி. தாமஸ் ஆசிரியர், திரு. டி. சவரிராயன் ஆசிரியர், திரு. ஜெ. சோர்ஸ், திரு. ஜி. உத்தரிய முத்து, திரு. ௭. ராசையா, திரு. சூசை வாத்தியார் ஆகியோர் பங்கேற்ற கட்டிடக் குழு செயல்பட்டது. நமது ஆலயத்தின் நடுப்பகுதியில் உள்ள குவிகை [டோம்] ரோமானிய பாரம்பரிய கலையம்சத்தோடு 180 அடி சுற்றளவில் காண்போரைக் கவர்ந்திழுக்கும் கம்பீரமான ஒரு அமைப்பு, இதன் பணியை ஏற்றெடுக்கப் பலரும் தயங்கிய நிலையில், துணிச்சலாக அப்பணியை ஏற்றெடுத்து அனைவரும் பாராட்டும் விதம், செய்து முடித்தவர், முன்னாள் நகர்மன்ற கவுன்சிலரும், ஊர் தலைவருமான ஜி. உத்திரிய முத்து அவர்கள். முன்னதாக 4,11.1972-ல் ஆலய வளாகத்தில் பாலர் பள்ளி [அங்கன்வாடி] திறக்கப்பட்டது; தற்போது நமது ஆலய வளாகத்தில் இரண்டு அங்கன் வாடிகள் செயல் படுகிறது.
இதனிடையே 21.04.1977-ல் நம்து இரண்டாவது பங்குத்தந்தையாக அருட்பணி. தாமஸ் பர்னாண்டோ பொறுப்பேற்றார். ஆலயக் கட்டுமான இறுதிக் கட்டத்தில் நிதிப் பற்றாக்குறையால் பணிகள் தாமதப்பட, ஊர் தலைவர் எஸ். எம். ஜேம்ஸ் அவர்களின் உந்துதலில் கோல்டன் தெருவில் செயல்பட்ட “இராமன்புதூர் ஐக்கிய கலாமன்ற இளைஞர்கள்” திரு. எம், சி, ல்சன் தலைமையில் ஆலயத்தின் வெளிப்புற சிமென்ட் பூசும் பணி முழுவதும் இலவசமாக செய்து கொடுத்து உதவினார்கள். பணிகள் நிறைவுற்று 30.12.1978 அன்று கோட்டாறு மறை ஆ மேதகு. எம். ஆரோக்கியசாமி அனிகளால புதிய ஆலயம் அர்ச்சித்து திறக்கப்பட்டது. மேல் மாடியோடு திட்டமிடப்பட்டு 21.12.1982- ல் அடிக்கல் இடப்பட்ட பங்குத்தந்தை இல்லம், 7:10.1985- ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. தற்போது திருவிழா நாட்களில் திருப்பலி நடைபெறும் ஆலய முகப்பில் உள்ள முன் மண்டபம் 22.12.1996-ல் திரு. ௭. சிலுவைராயன் ஊர் தலைவராக இருந்த போது கட்டி முடித்து திறக்கப்பட்டது. பங்கின் சமூகக் கூடங்கள், 14,6.1998- ல் அடிக்கல் நாட்டப்பட்டு பங்கு இறைமக்களின் நிதிப் பங்களிப்போடு, ஆலயத்தின் 50- ம் வருட பொன்விழாவின் போது, 9 மாதங்களில் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்யப் பட்டு, 26.12.1998-ல் ஜூபிலி ஹால், மற்றும் ஜீசஸ் ஹால் என்ற பெயரில், பங்குத் தந்தை அருட்பணி. அமல்ராஜ் நேவிஸ் அவர்களால் திறக்கப்பட்டது.
அப்போது ஊர் தலைவராக ஜி, ஜோசப் ஆசிரியரும், நிதிக்குழு தலைவராக பி, அந்தோனிமுத்து ஆசிரியரும், கட்டிடக் குழு தலைவராக திரு. எம். சி. நெல்சனும் செயல்பட்டார்கள். 1.1.1995- இல் கோவில் வளாகத்தில் செயல்படத் தொடங்கிய டாக்டர். ௭. டேவிஸ் நினைவு இலவச மருத்துவமனை ஆய்வுக்கூடம் மற்றும் மேல்மாடி கோட்டாறு ஆயர். மேதகு லீயோன் அ.தர்மராஜ் அவர்களால் 31.12.2000- இல் அர்ச்சித்து திறக்கப்பட்டது. பங்குப்பணியாளர் இல்லத்தின் முகப்பில் அமைந்துள்ள குழந்தையேசு 28.12.2000-ல் திரு பி, மரிய ஜான்சன் ஆசிரியர் தலைவராக இருந்த போது, பங்குத் தந்தை அருட்பணி. பி. அமல்ராஜ் நேவிஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. ஆலய வளாக விளிம்புகளில் கிழக்குப் புறம் மற்றும் வடக்குப்புறம் அமைக்கப்பட்டுள்ள யேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாதையின் 14 நிலைகளை சித்தரிக்கும் சுரூபங்கள் 2001-ல் பங்குத்தந்தை அருட்பணி. பி. மரிய சூசை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. நிர்வாக விதிமுறைகள் அடங்கிய டிரஸ்ட் 2002-ம் வருடம் நவம்பர் மாதம் 126-ம் எண்ணாக பதிவு செய்யப் பட்டது. 63 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட, வெண்கலக் கொடிமரம் பங்குத்தந்தை அருட்பணி. ஜெ. பிரான்சிஸ் சேவியர் அவர்களால் 25.12.2009-ல் அர்ச்சிக்கப்பட்டது.
2012-13-ல் திருக்குடும்ப ஆலய மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது. 2012-ல் ஆலய தேர் நிறுத்துவதற்கான கட்டிடம் கட்டப்பட்டது. திரு. ௭. ஸ்டீபன் செல்வராஜ் ஊர் தலைவராக இருந்த போது ஆலய வளாகத்தில் உள்ள புனித அந்தோனியார் குருசடி புதுப்பிக்கபட்டு 27.12.2016-ல் பங்குத் தந்தை அருட்பணி. ஜெ. ஆர். பாட்ரிக் சேவியர் அவர்களால் அர்ச்சித்துத் திறக்கப் பட்டது. 2019-ல் மருத்துவர். ஆல்பர் மதியரசு தலைவராக இருந்த போது கட்டப்பட்ட இரண்டு அங்கன் வாடிகள், ஆண், பெண் நவீனக் கழிவறைகள் மற்றும் ஆலய ஊழியர் குடியிருப்பு அடங்கிய கட்டிடத்தை, அருட்பணி. ஆர். பாட்ரிக் சேவியர் அர்ச்சித்து திறந்து வைத்தார்.
2020-ம் ஆண்டு அருட்பணி. எஸ். சகாயபிரபு பங்குப் பணியாளராகப் பொறுப்பேற்ற பிறகு, கொரோனா பேரிடர் முடிந்து, அசுரப் பாய்ச்சலோடு தொடங்கி பங்கு சமூகத்தின் பயணம் இறைமகன் யேசுவின் கனிவான் பார்வை கார்மல் நகர் மீது படர்ந்துள்ளது என்பதனை வெளிப்படுத்தியது. 2021-ம் வருடம் பேராசிரியர். பி. ஜோசப் ஆன்றனி ஊர் தலைவராக இருந்த போது சுமார் 87 லட்சம் ரூபாய் செலவில், ஆலயம் முழுமையாக நவீனப்படுத்தப்பட்டு, புதுப்பித்து கட்டப்பட்டது. பழைய பலிபீடம் அகற்றப்பட்டு, புதிய பீடம் அமைக்கப்பட்டது. பணிகள் நிறைவுற்று புதுப் பொலிவு பெற்ற ஆலயத்தை 22.12.2021 அன்று கோட்டாறு மறை ஆயர் மேதகு. நசரேன் சூசை அவர்கள் அர்ச்சித்துத் திறந்து வைத்து திருப்பலி நிறைவேற்றினார்.
2022 தொடங்கி 2023-ல் பவள விழா ஆண்டும் ஊர் தலைவராக இருக்கும் திரு. எம். ஜோசப் சுந்தர் ராஜின் தலைமையிலும் பங்குப் பணியாளர். அருள்பணி. எஸ். சகாய பிரபு அவர்களின் ஆன்மீக வழிகாட்டுதல் மற்றும் பிரார்த்தனையுடனும், பங்கு இறைமக்களின் முழுமையான நிதி பங்களிப்போடும் கார்மல் நகர் பங்கு முன்னேற்றப் பாதையில் மும்முரமாய்ப் பயணிக்கிறது. அருள் பிரகாஷ் தெரு மற்றும் சென்ட் மேரிஸ் மேற்கு தெருமுனையில் இருந்த புனித சந்தியாகப்பர் குருசடி, நண்பர்கள் சங்கத்தினரின் முன்னெடுப்பில் மாற்றப்பட்டு, புதிதாக கட்டியெழுப்பபட்டு, அருட்பணி. எம். சி. ராஜன் அவர்களால் 4.12.2022-ல் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.
மீன் சந்தை முகப்பில் அமைந்திருந்த புனித அந்தோனியார் பழைய குருசடி, அங்கு செயல்படும் அந்தோனியார் சமூக நல இயக்கத்தினரின் முயற்சியால் அகற்றப்பட்டு, புதிய குருசடி கட்டி எழுப்பப்பட்டது. புதிய குருசடியை பங்குத் தந்தை அருட்பணி. எஸ். சகாய பிரபு அவர்கள் 13.6.2023-ல் அர்ச்சித்துத் திறந்து வைத்தார். ஆலய வளாகத்து ஜூபிலி, ஜீசஸ் ஹால்களோடு இரண்டாவது தளத்தில் ஹோலி ஃபாமிலி ஹால் ஒன்றும் புதிதாக கட்டியெழுப்பப்பட்டுள்ளது. தற்போது கட்டிடக்குழு தலைவராக திரு. A. சேவியர் முத்து செயல்படுகிறார்.
தரைத்தள ஜூபிலி ஹால் முழுமையாக மேம்படுத்தப்பட்டு 15.8.2023 இல் திறக்கப்பட்டது; முதல் தள ஜீசஸ் ஹால் புதுப்பித்து நவீனப்படுத்தப்பட்டு, இரண்டாம் தள புதிய ஹோலி ஃபாமிலி ஹாலோடு பவள விழா நாளில் 26.11.2023 திறக்கப்பட்டிருக்கிறது.
நவீன வசதிகளோடு மேம்படுத்தப்பட்டு குளிரூட்டப் பட்ட அரங்குகளோடு திறக்கப் _ பட்டிருக்கும் இந்த மூன்றடுக்கு சமூகக் கூடங்கள். கார்மல் நகர் பங்கு மக்களின் ஒற்றுமை, பங்கில் நிலவும் அமைதிச் சூழல், மற்றும் இறைமக்களின் ஆன்மீகம், கல்வி மற்றும் சமூக, பொருளாதார வளர்ச்சியின் அடையாளமாக ஆலய வளாகத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. 26.11.2023-ல் பவள விழா நினைவு வளைவும் ஆலயத்தின் பிரதான நுழை வாயிலில் திறக்கப்பட்டுள்ளது. சமூகக் கூடங்களையும், பவளவிழா நினைவு வளைவினையும் திறந்து வைத்து ஆசி வழங்கியவர் கார்மல் நகர் பங்கின் முதல் பங்குத்தந்தையும் 100 வயது நிறைவு பெற்றவருமான அருட்பணி. ஐ. கார்மல் அடிகளார் என்பது தனிச் சிறப்பு.
சிதறி கிடந்த நம் முன்னோர்களை குருசடி அந்தோனியார் ஆலய இறைமக்களாக இரண்டு நூற்றாண்டுக்கு முன் ஒருங்கிணைத்து, 1944-ல் ஒரு ஜெபக்கூடத்தில் ஒருங்கிணைந், பிரார்த்திக்க வைத்து, 1948-ல் கிடைத்த அர ஆணையோடு 1949- ல் கட்டியெழுப்பிய சிற்றாலயத்தில் முதல் திருப்பலி கண்டபிறகு, ஆலய வளாகத்தை விஸ்தரிக்க நம் முன்னோர்கள் எடுத்த முயற்சிகள் ஏராளம். அவர்கள் இதயங்களை வாட்டிய ஏக்கங்களும், கனவுகளும் ஏராளம்.
அவையெல்லாம் தியாகமாகக் கூர்மையாக்கப் பட்டு, தாராள பரந்த மனதாக வெளிப்பட்டன; தங்களது நிலங்களை இஷ்ட தானமாகவும், மிகக் குறைந்த விலைக்கும் ஆலயத்துக்கு வழங்கியதன் சாட்சியமாகத் தான், நமது ஆலய வளாகம் இன்று, 3.25 ஏக்கர் பரப்பளவில், விசாலமான ஒரு கடல் மணல் திடலாகக் காட்சியளிக்கிறது. இந்தப் பவள விழா காலத்தில், நமது ஆலய வளாக பூமியில் புத்தொளி வீசி வீற்றிருக்கும் திருக்குடும்பம், இங்கு எழுந்திருக்கும் கட்டிடங்கள், அதற்கு அடித்தளமான நம் பங்கு மக்களின் உழைப்பு, வியர்வைத் துளிகள் ஆகியவற்றை தம் தூய ஆவியால் என்றும் நிறைத்திடுவார் என்ற நம்பிக்கையை நம் நினைவுப் பெட்டகங்களில் பதித்துப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை.
ஆலய சொத்துக்கள் அனைத்தும், பங்கு மக்களின் பொதுவான பிரதிநிதியான பங்குத் தந்தை பெயரிலேயே நம் கத்தோலிக்க மத மரபுப்படி எழுதப் படுகிறது. நம் பங்கு அலுவலகத்தில் பராமரிக்கப்படும், சொத்துப் பத்திரங்களில் 1944 -1947 வருடங்களில் பதித்த மூன்று பத்திரங்கள் அருள்பணி சி. ரிச்சர்ட் ரொசாரியோ பெயரில் உள்ளது. 1948-1949 வருடங்களில் எழுதப்பட்ட இரண்டு பத்திரங்கள், அருள்பணி அம்புரோஸ் பர்னாண்டோ பெயரில் உள்ளது. 1955-1959 வரையுள்ள ஐந்து பத்திரங்கள் அருள்பணி. டி.சி.ஆன்றனி பெயரிலும், 1961-1970 வரையுள்ள ஐந்து பத்திரங்கள் அருள்பணி. ஆர். அந்தோனி முத்து அவர்கள் பெயரிலும் உள்ளது. இவை அனைத்தும் இராமன்புதூர் தனிப் பங்காக உயர்த்தப்படுவதற்கு முன்பு, திருக்குடும்ப ஆலயத்துக்கு வேண்டி, நம் தாய்ப் பங்கான குருசடி பங்குத் தந்தையர்கள் பெயருக்குப் பதிக்கப்பட்டவை.
1971-ல் எழுதப்பட்ட மூன்று பத்திரங்கள் கார்மல் நகர் பங்குத்தந்தை அருள்பணி. ஐ.கார்மல் அடிகள் பெயரில் உள்ளது. 1978 முதல் 1980 வரை எழுதப்பட்ட மூன்று பத்திரங்கள் அருள்பணி. தாமஸ் பர்னாண்டோ பெயரில் உள்ளது. தற்போது ஆலய வளாகத்தில் செயல் படும், டாக்டர். டி. ௭. டேவிஸ் நினைவு மருத்துவ மனை இருக்கும் 8 சென்ட் 382 ச.அடி நிலப் பரப்பு, 17.5.1990-ம் ஆண்டு, திருமதி. ரெத்தினபாய் டேவிஸ் அவர்கள், திருக்குடும்ப கோவில் வகைக்கு இஷ்டதானமாக, அப்போதைய பங்குத் தந்தை அருள்பணி. எம். பீட்டர் அடிகள் பெயருக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.
அப்போது, ஊர் தலைவராக பி. அந்தோனிமுத்து எம். ஏ. எம். எட் இருந்தார். இப்போது பொன்னப்ப நாடார் காலனியில், நம் பங்குக் கல்லறைத் தோட்டமாக இருக்கும் 21.25 சென்ட் நிலப்பரப்பு 27.3.1991-ல் திருக்குடும்ப ஆலயத்துக்கு வேண்டி, விலைப் பத்திரம் மூலம் யார் ஒருவரிடம் இருந்து பங்குத்தந்தை அருள்பணி. எம். பீட்டர் அடிகள் பெயருக்கு ஊர் நிர்வாகத்தால் வாங்கப்பட்டதாகும்.
இது 1992-ம் வருடம் முதல் கார்மல் நகர் பங்கின் இரண்டாவது பொது கல்லறையாக பயன்பாட்டுக்கு வந்தது. 1992 வரை பங்கின் அனைத்து உறுப்பினர்களுக்குமான ஒரே பொதுக் கல்லறையாக மீன் சந்தை அருகிலுள்ள கல்லறை மட்டுமே இருந்த நிலையில், அங்கு புதிய கல்லறை தோண்டுவதற்கு இட நெருக்கடி ஏற்பட்டதால், 1978-ம் ஆண்டுக்குப் பிறகு கார்மல் நகரில் உறுப்பினராகச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தும் பங்கின் இரண்டாவது பொது அடக்க இடமாக, பொன்னப்பநாடார் கல்லறைத் தோட்டம் நடைமுறைக்கு வந்தது.
இவை தவிர லிட்டில் பிளவர் தெரு கோல்டன் தெரு சந்திப்பில் உள்ள புனித சூசையப்பர் குருசடி, சென்ட் மேரீஸ் மேற்கில் அமைந்துள்ள, புனித சந்தியாகப்பர் குருசடி, லிட்டில் பிளவர் தெருவில் அமைந்துள்ள மீன் சந்தை, புனித அந்தோனியார் குருசடி மற்றும் இராமன்புதூர் சந்திப்பில், ரீட்டாஸ் கன்வென்ட் முகப்பில் அமைந்துள்ள புனித லூர்து மாதா கெபி ஆகியவை கார்மல் நகர் பங்குக்கு சொந்தமான நிலப் பரப்பில் அமைந்துள்ளதும், ஊர் நிர்வாகத்தின் கீழ் இருப்பதுமாகும்.
இந்த நான்கு குருசடிகளிலும் நடைபெறும் நவநாள் ஜெபங்கள், பராமரிப்பு, வருடாந்திர திருவிழாக்கள், சமபந்தி ஆகியவற்றை “அமைப்பு” ரீதியாக ஒருங்கிணைந்து ஊர் நிர்வாகத்தின் அனுமதியோடு, அந்தந்த பகுதிவாழ் இறைமக்கள் செய்து வருவது இராமன்புதூர், கார்மல் நகர் பங்கு மக்களின் தனித்தன்மையை வெளிப் படுத்தும் ஒரு உன்னதயதார்த்தமாகும்.
சமூகத்தின் நலிவுற்ற மக்களுக்காக, நம் ஆலய வளாகத்தில் செயல்பட்டு வரும் டாக்டர். ௭. டேவிஸ் இலவச மருத்துவ மனையின் சேவையும், ஆதரவற்ற முதியோருக்கும், விதவைகளுக்கும்மாதம் தோறும் ரூ.1000/- வீதம் நமது நிர்வாகம் வழங்கும் உதவித் தொகைத் திட்டமும் மகத்தானவை. ஆலய வழிபாடு மூலம் மட்டுமல்ல, இதுபோன்ற சமூகத்தின், சின்னஞ்சிறிய சகோதரரு செய்யும் நலப்பணிகள் வழியாகவே, திரு விவிலியத்தின் மத்தேயு 25:40 வார்த்தையில் இறைமகன் யேசு சுட்டிக்காட்டும் இறை ஆசிக்கும், இறை அங்கீகாரத்துக்கும், நாம் தகுதி பெறுவோம் என்ற நம்பிக்யாடு நம் ஆன்மீகப் பயணத்தைத் நுற்றாண்டு நோக்கித் தொடருவோம்